பக்தி விஜயம்

'பக்தி விஜயம்' என்பது கடவுள் பக்தியின் மகத்துவத்தையும், மகான்களின் வாழ்க்கையையும், பக்தி மார்க்கத்தின் கதைகளையும் சித்தரிக்கும் ஒரு பக்திப் பயணத்தைக் குறிக்கிறது.இனி பக்தி விஜயம் உங்களுக்காக...


முன்னுரை - அன்பே சிவம்


அன்பெனப்படுவது யாதெனில் அது உறவுகள் மீது மட்டும் செலுத்தப்படும் கரிசனம் அல்ல எல்லா ஜீவராசிகளிடத்தும் சமமாக செலுத்தப்படுவதே அன்பு

உறவுகள் மீது மனிதன் செலுத்துவது பாசமாகிறது. அது முழுக்க எதிர்பார்ப்பில் உருவாகிறது. ஆதாயம் கருதி ஒருவரோடு ஒருவர் இணைப்பில் இருக்கிறது.

குழந்தைகள் பெற்றோரிடம் ஆதாயம் பெறுகிறார்கள்

பெற்றோர்கள் குழந்தைகளிடம் தங்கள் எதிர்கால பாதுகாப்பை எதிர்பார்க்கிறார்கள்

கணவன் மனைவிடமும் மனைவி கணவனிடமும் ஆதாயம் கருதி ஜீவனம் நடத்துகிறார்கள்

சகோதர சகோதரிகளும் உற்றார் உறவினர்களும் தேவை ஏற்படும் காலத்தில் மிகுந்த பரிவோடு நடத்துவதும் தேவையில்லாத காலத்தில் விலகி செல்லுவதும் யாவரும் அறிந்ததே.

இவ்வகையான பரிவு உபசரிப்புகள் பாசம் என்று அறிந்து கொள்ள வேண்டும்.

இது ஒருவகையான பிணைப்பு இது உயிர்களை துன்பத்தில் தள்ளக்கூடியது.

இந்த பாசம் என்பது உயிர்களுக்கு ஆதி அனாதி. பாசம் என்பதே உங்களை இந்த உலகில் செயல்களை உருவாக்குகிறது. மனிதன் பாசத்தின் காரணமாகவே ஓடுகிறான் ஆடுகிறான் இயங்குகிறான். பல கர்மங்களை செய்கிறான்.

எப்போது பாசம் அன்பாக மாற்றம் பெறுகிறதோ அப்போதே மனிதன் மலர்ச்சி அடைகிறான்.

பாசம் மிதமிஞ்சி போகையில் மனிதன் செய்யும் செயல்களில் தர்மத்தை கடைபிடிக்க தவறுகிறான்.

பெற்றோர்கள் குழந்தைகள் மீது மித மிஞ்சிய பாசம் செலுத்தும் போது குழந்தைகள் கெட்டு போகிறார்கள்.

அதிக பாசம் செலுத்தப்பட்ட எந்த உறவும் சோடை போகிறது. அன்பின் வழி நிற்கும் உறவு பிரகாசிக்கிறது.

திருதராஷ்ட்டிரன் தன் மகன் துரியோதனன் செய்யும் அட்டூழியங்களை கண்டிக்க இயலாத வகையில் பாசம் கொண்டிருந்தான் இறுதியில் தன் மகனை இழந்து போனான். பாசம் கண்ணை மறைக்கும் தர்மத்தையும் மறைக்கும்.

அன்பு தர்மத்தின் வழியில் நிற்கும் உங்கள் குழந்தைகளின் மீது வெறும் பாசம் செலுத்தினால் நீங்கள் குருடன் திருதராஷ்ட்டிரனை போல் ஆகிறீர்கள்.

நீங்கள் கண்டிக்காத குழந்தையை இ்ந்த உலகம் தண்டிக்கும்.

அன்பு எப்போதும் தர்மத்தின் வழியில் நிற்கும்

எனவே உங்கள் உறவுகள் மீது பாசம் செலுத்துங்கள் தவறில்லை ஆனால் அதை அன்பாக மாற்றும் வழிகளை கண்டுகொள்ளுங்கள்.

உறவுகளின் தவறுகளை கண்டியுங்கள் தண்டியுங்கள் உறவுகளுக்கு அடிமையாகாதீர்கள் எப்போதும் தர்மத்தின் வழியில் நிற்க வேண்டும்.

அதற்கு நீங்கள் தர்மத்தை முழுவதும் அறிந்து கொள்ள வேண்டும்.

உங்கள் உறவுகளையும் தர்மத்தின் வழி செலுத்த வேண்டும். அதில் விட்டுகொடுக்க கூடாது. எப்போதெல்லாம் விட்டு கொடுக்கிறீர்களோ அப்போதெல்லாம் நீங்கள் பாசத்திற்கு அடிமையாகி சிக்கி இருப்பதை அறிந்துகொள்ளுங்கள்.

தர்மத்தினை கடைபிடிப்பதில் நீங்கள் வெகுஉறுதியுடன் நிற்க வேண்டும். ஏனென்றால் தர்மம் வலிமையானது உறுதியானது. வலிமையானவர்களே கடைபிடிக்க முடியும்.

அன்பின் முதல்படி பக்தி. இரண்டாம் படி தர்மம்.

இல்லறத்திருந்து இறைவனை அறியே இதுவே பாதை வேறெந்த பாதையும் கிடையாது. இதுவே உண்மை ஆன்மீகம்.

பாசத்தில் சிக்கித்தவிக்கும் மனிதனை பசு என்பார்கள் பசு எவ்வாறு உழைத்து தேய்ந்து பல துன்பங்களை சுமந்து மாண்டு போகிறதோ அதுபோலவே பாசத்தின் வயப்பட்ட மனிதனின் வாழ்க்கையும். இந்த பசுவை மீட்டு எடுத்து நல்வாழ்வை அளிப்பதாலேயே இறைவனை பசுபதி என்கிறோம்.

அன்பே சிவம். ( தொடரும் )