பக்தி விஜயம்

பக்தி விஜயம் முன்னுரையில் அன்பே சிவம் என்றும். சிவத்தை அறியும் முதல் படி பக்தி என்றும் பார்த்தோம். இனி பக்தி விஜயம் உங்களுக்காக..


பகுதி 1

அருட்பெருஞ்சோதி சொரூபமாய் விளங்கும் ஈசன் உலக மக்களுக்கு அருள்புரியும் பொருட்டு பல்வேறு இடங்களில் பலவிதமான சிவலிங்கத் திருமேனியாக ( லிங்க வடிவமாக ) வழிபாட்டு தலங்களில் வீற்றிருக்கிறான்.

பேரொளிப் பிழம்பாய் விளங்கும் பரம்பொருளை இந்த மானிட கண்களால் தரிசிக்க முடியுமா. இறைவனின் போரொளி வடிவத்துக்கு அருவம் என்று பெயர். அதாவது உருவம் இல்லாதவன்.

அதே இறைவன் எண்ணற்ற பக்தர்களின் மனதை ஆட்கொள்ள பல விதமான வடிவம் கொண்டு உருவமாகவும் காட்சியளிக்கிறான்.

ஆனால் இந்த சிவலிங்க வடிவமோ அருவுருவமாகிறது. அதில் உருவமும் உண்டு அருவமும் உண்டு அதுவே அருவுருவம்.

விண்வெளியில் அண்டங்கள் முதல் நெல்லின் வடிவம் வரை பல வஸ்துக்கள் ( பொருட்கள் ) லிங்க வடிவத்தை ஒட்டியே இருக்கிறது. லிங்கவடிவம் பிரபஞ்சத்தின் மூலவடிவம்.

இறைவன் இந்த சிவலிங்கத்திருமேனியாக தமது சித்தத்தின் படி பல இடங்களில் தானே தோன்றி நிற்பதுண்டு. அதை சுயம்பு என்கிறோம். தானே உருவானது சுயம்பு. நல்லோர்கள் சிலரால் சிவலிங்க வடிவாக செதுக்கி கோவில்களில் வைத்தும் வணங்கப்படுவதுண்டு

மனிதர்கள் உருவாக்கிய கல்லிலும் இறைவன் வந்து அமர்ந்து அருள்புரிகிறான்.

தானே உருவாகிய சுயம்பு வடிவிலும் இருந்துகொண்டு இம்மானுடர்களுக்கு அருள்புரிகிறான்.

மனிதன் தேர்ந்தெடுத்த இடத்தை விட இறைவன் தாமே தேர்ந்தெடுக்கும் இடத்திற்கு பெருமை அதிகமாகத் தானே இருக்கும்.

ஆம் அப்படித்தான் ஆதிகாலத்தில் நமது ஆன்மீக பூமியாம் தமிழ் மண்ணில் ஒரு மருதநிலம் இருந்தது. அங்கே இறைவன் தானே சுயம்புவாக எழுந்தருள திருவுளம் கொண்டான்.

ஆம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அங்கே தோன்றி மக்களுக்கு ஆத்ம சந்தோஷம் அளிக்க வந்தமர்ந்தான்.

சுயம்பு லிங்கமாக வயல்வெளிகளை தாண்டிய வனப்பகுதியில் எழுந்தருளினான்.

தானே சித்தம் கொண்டு தோன்றினான் அந்த சித்தேஸ்வரன்.

வெள்ளந்தி மனிதர்கள் வாழ்ந்த காலம் அது. மக்கள் அமைதியான வாழ்க்கை முறையை கொண்டிருந்தார்கள்.

விவசாயம் செழித்திருந்தது மனிதர்கள் ஆரோக்கியமான மனமும் வலிமையான தேகமும் பெற்றிருந்தார்கள். கழனி வேலை செய்வோர் கூட பக்தியும் இறைவன் மீது பணிவும் கொண்டிருந்தார்கள். யாரும் யாவருடனும் ஆதாயம் பார்க்காமல் பழகி கொண்டிருந்தார்கள். பரபரப்பு இன்றி நிம்மதியாக வாழ்ந்தார்கள். எளிமையாக வாழ்ந்தார்கள்.

எங்கும் பசுமை சூழ்ந்த வயல்வெளிகள் காணப்பட்டது. கிராமங்கள் வெயிலும் காற்றும் வீச நல்ல சூழல் நிலவியது. மண்மணம் கமழ மழையும் வெப்பமும் சமமாய் இருந்தது. குளங்களும் கண்மாய்களும் நீரால் நிரம்பி வளம் பெற்றுக்கிடந்தது.

கொக்குகளும் நாரைகளும் கீச்சுக்குருவிகளும் செறிவாய் பறந்து திரிந்தன. அதன் சத்தங்கள் மனிதனின் மனதை குதூகலப்படுத்துவதாய் இருந்தன.

தட்டான்களும் தும்பிகளும் இயற்கை வளத்தை பறை சாற்றின. தவளைகளும் மீன்களும் நீரில் ஆனந்தகளிப்பாடிக் கொண்டிருந்தன.

தாமரை பகலை அழகுபடுத்த. அல்லி மலர்கள் இரவையும்அழகுபடுத்தியது பௌர்ணமிக்கால இரவோ தடாகத்தின் பிரதிபலிப்புடனும் குளிர்ந்த காற்றுடனும் முல்லைப்பூவின் வாசத்துடனும் அந்த நிலப்பகுதியையே சொர்க்கமாய் மாற்றி வைத்திருந்தது.

கால்நடைகள் நிறைந்திருந்தன

மயில்கள் எப்போதும் ஆடிக்கொண்டிருந்தது.

இவை யாவையும் புன்முறுவலோடு பார்த்து அமைதியாக லிங்கமாக அமர்ந்திருந்தான் சித்தேஸ்வரன். ஆனால் அவனையோ யாரும் கவனிக்கவில்லை.

ஈசன் அமர்ந்திருந்த அந்த பசுமையான வனத்திற்கு எதிரே நீர்நிலை இருந்தது. மீன்கள் துள்ளி குதித்து விளையாட கொக்குகளும் நாரைகளும் கூட்டமாய் பறந்து கொண்டிருந்தது.

ஒரு நாள் அந்த ஈசனுக்கு நேர் எதிராக வந்து நின்றது ஒரு நாரை. நாரை வந்ததோ மீன் பிடிக்க, குனிந்து மீன்களை பார்த்த படி வந்து நின்று சற்று நடந்து நல்ல சேறுபடிந்து கிடந்த தண்ணீருக்குள் தோதாக ஓர் இடமாகப் பார்த்து ஒற்றைக் காலை ஊன்றி மறு காலைத் தூக்கியது அதன் கவனம் ஆற்று மீன்களில் ஒருமித்தது.

நாரையின் கவனம் தவயோகியின் கவன ஒருமை போன்று அதி தீரமானது.

நாரை நோட்டமிட்டது ஆனால் என்றும் போல் அல்லாமல் அதற்கு கவனம் ஒருமுகப்படவில்லை.

ஏனேன்றால் எதிரே ஈசன் வீற்றிருக்கிறான் அல்லவா. நேர் எதிராக நின்ற நாரை நிமிர்ந்து பார்த்தது. புல்வெளிகளுக்குள் தோன்றியிருந்த சிவலிங்கத்தின் மீது அதன் பார்வைபட்டது. அதன் மனம் இறைவன் மீது லயித்தது. ஈசன் கருணைப் பார்வை நாரையின் உடம்பை சிலிர்த்து போக வைத்தது. என்னவென்று ஏதுவென்று தெரியவில்லை பாவம் நாரைக்கு.

ஆனால் அதைப்படைத்தவனோடு அதற்கு தொடர்பு இருக்காதா என்ன.

சொல்லொணா உணர்வு வயப்பட்ட நாரை ஈசனை கவனித்தது. இப்போது உற்றுப்பார்க்க ஆரம்பித்தது. அதன் மொத்த கவனமும் ஈசன் வயப்பட்டது.

லௌகீக நாட்டத்தில் ஈடுபடும் மாந்தர்களும் இறைவனை ஏறெடுத்து பார்க்காமல்

மீனை குறிகொண்டு தேடும் நாரை போலவே இருக்கிறார்கள். என்றேனும் ஏறெடுத்து ஈசனை பார்த்தால் அல்லவா அவர்களால் இறைவனையும் அவன் கருணை உள்ளத்தையும் தெரிந்து கொள்ளமுடியும்.

அந்த நாரை ஈசனை பார்த்துக்கொண்டே இருந்தது. பரவசம் அதன் இதயத்தை தொட்டது.

ஒருவேளை அந்த நாரை முன்ஜென்மத்தில் யோகியோ என்னவோ. விட்ட குறை தொட்டகுறையோ யாரறிவார்.

பகல்முழுதும் கழிந்தது சிவலிங்கத்தை பார்த்துக் கொண்டே இருந்தது. மாலை கருக்கலில் அது அங்கிருந்து பறந்தோடியது. பறவையாயிற்றே அதற்கு அறிவு எவ்வளவு.

மறுநாள் விடிந்ததும் நேராக வந்து அமர்ந்தது ஈசனுக்கு எதிரே. வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தது. நாரைக்கு என்ன வந்தது என்று நாரைக்கு தெரியவில்லை. நாரைக்கு பக்தி உடம்பின் உள்ளே ஊற ஆரம்பித்துவிட்டது. நாரையின் காலடியில் வந்து வழுந்தன மீன்கள் பசியை தீர்த்து கொண்டது. பகவான் அருள். மீண்டும் சிவலிங்கத்தை பார்த்து கொண்டே இருந்தது. மாலை சென்றுவிட்டது.

இதே கதை தொடர்ந்து யாரோ ஒரு பெண்மணி இந்த நாரையைும் அது தொடர்ச்சியாக ஒரே இடத்தில் அமர்வதையும் கவனித்துவிட்டாள்.

இயற்கையின் நுண்ணிய அசைவுகளையும் பறவைகள் விலங்குகளின் செயல்களையும் படித்து வைத்திருந்தனர் அந்த காலத்து மக்கள். அவர்கள் வாழ்க்கையில் செயற்கை இல்லை இயற்கை மிகுந்து இருந்தது. நாரை தொடர்ந்து ஈசனை கவனிக்க அவளோ நாரையை தொடர்ந்து கவனிக்க ஆரம்பித்தாள்.

மெல்ல இந்த செய்தி ஊர் முழுக்க பரவியது. மக்கள் கூட்டம் வந்து கூடியது.அந்த நாரைக்கு எதிரே என்னதான் இருக்கிறதென்று மக்கள் அறிந்து கொள்ள ஆவலானார்கள். புற்களை அகற்றிப்பார்க்க தெய்வீக அருள் நிறைந்துபிரகாசிக்கும் சிவலிங்கத்தை கூட்டம் கண்டது.

அங்கே கூட்டத்தினர் உண்டாக்கிய சலசலப்பில் அங்கிருந்த மொத்த பறவைகளும் பறந்தோட அந்த ஒரு நாரை மட்டும் ஒற்றைக்காலில் தவம் செய்து கொண்டிருந்தது. கூட்டத்தினர் ஆச்சர்யத்தில் பார்க்க பக்தி மேலிட்ட சிலருக்கு புல்லரிக்க தொடங்கியது. இன்னும் சிலர் ஓடிப்போய் தட்டில் தீபமேற்றி வந்து ஈசனுக்கு காட்டி அங்கே வைத்தார்கள் சிலர் மலர்களை தூவினார்கள்.

பெரியவர்கள் சிலரை கூட்டி வர அவர்கள் ஆலோசனை செய்தார்கள்

அனைவரும் நாரையை வியப்போடு பார்த்து சென்றார்கள்.

நாட்கள் ஓடியது

முன்பெல்லாம் எங்கேயோ சென்றே வந்த நாரை இப்போது அங்கேயே இரவும் பகலும் சிவபெருமானை தியானித்து கொண்டே நின்றது.

பக்கத்து ஊரார் எல்லாம் வந்து பார்த்து செல்ல அங்கே வழிபாடுகள் ஆரம்பமாயின.

நாரை இப்போதெல்லாம் காலில் வந்து கிடக்கும் குப்பலான மீன்களையும் உண்ணாமல் விரதமிருந்தது.

எல்லாம் துறந்த யோகிக்கு உலகவாழ்வில் எவ்வாறு மனம் ஒட்டுவதில்லையோ அது போல் மீன்களை சட்டை செய்யாமல் நின்றது நாரை.

அந்த நாளும் வந்தது.

ஊர்மக்கள் எல்லோரும் பார்த்திருக்க ஒரு நாள் அந்த நாரை ஜோதியாக மாறி அந்த ஔி நேர சென்று சிவலிங்கத்தில் ஐக்கியமானது. எல்லாரும் நமச்சிவாய நமச்சிவாய என ஓங்கி கத்தினார்கள். சிலர் கண்கள் அழுது கைகூப்பி நின்றார்கள். சிலர் கீழே விழுந்து கும்பிட்டார்கள்.

அந்த சிவஜீவ ஐக்கியம் அங்கே நிகழ ஸ்தம்பித்து போனது அக்கூட்டம். பெரிய நிசப்தம் சூழ்ந்தது. அந்த இடம் முழுக்க தெய்வீகலயம் இறங்கியது.

நாரையின் தவமும் தாக்கமும் அந்த ஜனங்களுக்கு வெகுகாலம் பேச்சுப்பொருளாகவும் சிந்திக்கும் பொருளாகவும் இருந்தது.

பக்கத்து ஊர்காரர்கள் எல்லாம் நாரை வந்து வழிபட்ட ஊரை நாரையூர் என்று பெயர் சொல்லி வழங்கினார்கள்.

நூற்றாண்டுகள் உருண்டோட அந்த இடம் பிற்காலத்தில் திருநாரையூர் என்ற தெய்வீகத்தலமாக வளர்ந்து நின்றது.

இந்த இடத்திலிருந்தே நமது பக்தி விஜயம் தொடரும் ஆரம்பமாகி இருக்கிறது ஏன் ?

( தொடரும் )